நன்றி!

எனது படம்
கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்தல்; மூடநம்பிக்கைகளைச் சாடுதல்; தாய்மொழியைப் போற்றுதல்; சிந்திக்கும் திறனை வளர்த்தல்; சிறுகதைகள் படைத்தல் என்றிவையே இவ்வலைப்பக்கத்தை நான் வடிவமைத்ததன் நோக்கங்கள் ஆகும். வாசிப்போர்க்கு என் எழுத்து எவ்வகையிலேனும் பயன் நல்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. தங்களின் வருகைக்கு நன்றி.

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

இது ஜோதிடர் யுகம்!!!


பெண் பாவம் க்கான பட முடிவு
ரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா.

மனதில் தாங்க முடியாத வலி. முகத்தில் பயமுத்திரை.

எதிரே, கனல் கக்கும் கண்களுடன் முரட்டுக் கணவன் வரதன். இரு பக்கமும் மூட நம்பிக்கைகளின் சேமிப்புக் குதிர்களாய் மாமனாரும் மாமியாரும்.

“என்னடா, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறே. பிறந்த நட்சத்திரத்தை மறைச்ச உன் பெண்டாட்டி பிறந்த சாதியைக்கூட மறைச்சிருப்பா. அவள் சாதி என்னான்னு கேளுடா” என்றார் வரதனின் அப்பா திருமலைச்சாமி.

“சொல்லுடி, பொய் ஜாதகம் காட்டி இதுக்கு முந்தி எத்தனை புருஷன் கட்டினே?” -கேட்டவள், வரதனை ஈன்று புறம் தந்த தனலட்சுமி.

சாரதா வாய் திறக்கவில்லை.

“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்னு சொல்லுவாங்க. இனி நம்ம கதி என்ன ஆகுமோ?” என்று தனலட்சுமி தொடர்ந்து ஒப்பாரி வைத்தபோதும் சரி, “மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் மருமகளா வந்தா மாமனாரைத் தின்னுடுவான்னு சொல்லுவாங்க. நான் சாகத் தயார். நீங்க பிழைச்சிருந்தா போதும்” என்று திருமலைச்சாமி முற்றும் துறந்த சாமியார் வேடம் தரித்தபோதும் சரி சாரதா மௌனமே சாதித்தாள்.

“என்னடி, வாயில் கொழுக்கட்டையா? பேசேண்டி” என்று வரதன் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கியபோதுதான், “நான் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். போலி ஜாதகம் காட்டி உங்களையெல்லாம் நாங்க ஏமாத்தினது தப்பு. மன்னிச்சிடுங்க. இதனால் எந்தக் கெடுதலும் நடந்துடாது” என்றாள்.

“ஏன் நடக்காது? திருவேங்கடம் என் சகலை. பெரிய ஓட்டல் வெச்சி நடத்திட்டிருந்தான். ஒரே மகன். அவன் காதலிச்ச பொண்ணையே சாதிமதம் பார்க்காம, ஜாதகம் பார்க்காம கட்டி வெச்சான். எண்ணிப் பத்தே நாள். அவன் குடும்பத்தோட போன கார் லாரி மோதி நொறுங்கிச்சி. திருவேங்கடம் அப்பவே செத்துட்டான். அவன் பொண்டாட்டிக்குப் பலத்த அடி; கோமாவில் கிடக்குறா. மகனுக்கு ஒரு கை போயிடிச்சி. மருமகக்காரி மட்டும் சின்னக் காயத்தோட தப்பிச்சுட்டா. அவ மூல நட்சத்திரத்தில் பிறந்தவள்ங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சுது. நீயும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள். நீ இந்த வீட்டில் இருந்தா எங்களுக்கும் இந்தக் கதிதான்.” -அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் திருமலைச்சாமி.

“மூலமாவது கூலமாவதுன்னு மூல நட்சத்திர தோஷமுள்ள ஒரு மூதியை மருமகளா கொண்டுவந்தா என் பெரியம்மா மக. ஆறே மாசத்தில் தாலி அறுத்துட்டா. நெஞ்சு வலிக்குதுன்னு படுத்த அவ புருஷன் எந்திரிக்கவே இல்ல.” -இது தனலட்சுமி.

நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது சாரதாவுக்கு. ஓரக் கண்ணால் வரதனைக் கவனித்தாள். மீண்டும் கை ஓங்கி வருவானோ? அடித்து நொறுக்குவானோ? சிவப்பேறிப் பழுத்த அவனின் கண்கள் சாரதாவை இப்படிச் சிந்திக்க வைத்தன.

வாய் திறவாமல் இருந்தால் தண்டனை கடுமையாகலாம் என்று பயந்தாள் அவள்; சொன்னாள்: “ஒரு கார் விபத்து நடக்குதுன்னா அதுக்கு டிரைவரும் காரணமா இருக்கலாம். ஒருத்தர் திடீர்னு செத்துப் போறார்னா, அதுக்கு மாரடைப்பு மாதிரியான நோய் காரணமா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்காம, எல்லாக் கஷ்டங்களுக்கும் மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளே காரணம்னு நீங்க சொல்றது என்னங்க நியாயம்?”

“என்னடி, நாக்கு நீளுது?” சாரதாவின் தோள்பட்டையில் எட்டி உதைத்தான் வரதன். “பத்து வருஷமா கட்டப்பஞ்சாயத்துப் பண்றேன். டூப்ளிகேட் ஜாதகம் காட்டி என்னையே ஏமாத்திட்டான் உன் அப்பன். சிங்கப்பூரில் இருந்து வந்த உன் தாய் மாமன், 'மூலநட்சத்திரத்தில் பிறந்த சாரதாவைக் கட்டிகிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'ன்னு பாராட்டினபோதுதான் நாங்க எமாந்தது தெரிஞ்சுது. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்......”

பேசுவதை நிறுத்தி, எங்கெல்லாமோ தேடி, நீண்டதொரு அரிவாளை எடுத்துவந்தான் வரதன். “இந்த நிமிசமே இங்கிருந்து ஓடிடு. இல்லேன்னா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.

“நான் எங்கே போவேங்க?”

“எங்கேயோ போ. ஏன், உன் அப்பன் வீட்டுக்கே போயேன்.”

“ஆஸ்துமாவோடு போராடுற அம்மா. வாழாவெட்டியா ஒரு அக்கா. கல்யாணம் எப்போ ஆகும்னு கூரையை அண்ணாந்து பார்த்துட்டிருக்கிற தங்கச்சிக. வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்துற தம்பி. கஷ்டங்களைச் சுமக்க முடியாம என் அப்பா திணறிட்டிருக்கார். வாழாவெட்டியா நானும் போய் நின்னா அவர் மூச்சு நின்னுடுங்க.”

வரதனின் கால்களில் விழப்போனாள் சாரதா. அவன் விலகிக்கொண்டான்.

“உன் அப்பன் சாகாம இருக்க நான் என் புருஷனைப் பலி கொடுக்கணுமா?” -கொதிக்கக் கொதிக்க வார்த்தைகளைக் கொட்டினாள் தனலட்சுமி.

“வேண்டாங்க. அப்படியெல்லாம் ஏதும் நடந்துடாதுங்க. நான் கல்யாணம் ஆகிவந்து  வருஷம் ஒன்னு ஆயிடிச்சி. அசம்பாவிதம் ஏதும் நடக்கலையே.”

கவனக்குறைவாய் கழிவறையில் தனலட்சுமி சறுக்கி விழுந்து காலை முறித்துக்கொண்டது; தண்ணியடித்துவிட்டுத் திருமலைச்சாமி மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டையைப் பிளந்துகொண்டது. தொழில் போட்டியில் எதிரிகளுடன் மோதி வரதன் ஒரு கையை உடைத்துக்கொண்டது என்றிப்படிக் காலாவதி ஆகிப்போன கஷ்டநஷ்டங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சாரதா மீது பழி போட்டார்கள் அவர்கள்; அவள் வீட்டைவிட்டு வெளியேறத்தான் வேண்டும் என்று ஒருமித்த குரலில் உத்தரவு போட்டார்கள்.

“இன்னொரு கல்யாணம் வேணுன்னா பண்ணிக்குங்க. என்னை இங்கிருந்து விரட்ட வேண்டாம்” என்று மன்றாடினாள் சாரதா. பலனில்லை.

வரதனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் மனம் இளகவில்லை.

“மரியாதையாப் போயிடு. இல்லேன்னா, சீமெண்ணை ஊத்தி எரிச்சுடுவேன். போகப் போறியா இல்லியா?”
“போயிடுறேங்க.”

ஒரு நூறு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து, “ரயில் வர்ற நேரம். சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி  நகர்ந்தான் வரதன்.

வெளியே பைக்கின் உறுமலோசை கேட்டது.

கொஞ்சம் துணிமணிகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு சாரதா புறப்படத் தயாரானபோது உள்ளறையின் கதவு சாத்தப்படுவது தெரிந்தது.

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் சாரதா. ரயில் வருவதற்கு இருபது நிமிடங்கள் போல இருந்தன. எட்டி நடை போட்டால் பத்து நிமிடங்களில் ரயில் பாதையை  அடைந்துவிட முடியும்.

வீட்டிலிருந்து வெளியேறினாள் சாரதா; நடந்துகொண்டே எதையெல்லாமோ யோசித்தாள்.

எதிர்வரும் ரயிலை எதிர்பார்த்து இரு தண்டவாளங்களுக்கிடையே மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அவள்.